கடந்த ஆண்டு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா - ரவிகரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து,முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களத்தினூடாக மாற்றுத்திறனாளிகளின் பொருண்மிய மேம்பாட்டிற்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் சோளம், செவ்விளநீர், நிலக்கடலை உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து, வியாபாரத்தின் மூலம் மேம்பாட்டடைய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவ்வுதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் குறித்த இருபது பயனாளிகளுக்கும்15000 ரூபாய் வீதம் உதவுதொகை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறிய வருகையில்,

இந் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.நடராசா - தசரதன் அவர்களின் தலைமையில்  நேற்று முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களத்தில் நடைபெற்றது.மேலும் நிகழ்வில் கலந்துகொண்டு தனது ஒதுக்கீட்டினூடான இந் நிதியினை ரவிகரன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிவைத்தார்.

அதேவேளை இருபது பயனாளிகளினதும் உற்பத்திப் பொருட்களைக் களஞ்சியப்படுத்துவதற்காக, வடமாகாணசபையின் இவ்வருட ஒதுக்கீட்டின் மூலம் ரூபாய் 9,50000.00 (ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம்) நிதி ஒதுக்கப்பட்டு, நகர்த்தக்கூடிய வகையிலான களஞ்சிய அறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.மேலும் இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா - ரவிகரன் அவர்கள், திரு.சி.சுசிதரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு.இ.அம்பிகைப்பாலன் (ஒளிரும் வாழ்வு அமைப்பின் செயலாளர்) ஆகியோருடன் பயனாளிகளும் கலந்திருந்தனர்.