பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சமர்ப்பித்த பிரேரணையை மீண்டும் நாளை சமர்ப்பித்து பெயர் பட்டியலுடன்  முறையாக வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த கலந்துரையாடலின்போது நாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தங்கள் வசம் இருப்பதாக இதன்போது தெரிவித்த கட்சித் தலைவர்கள், அதனை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் அதற்குரிய கௌரவத்தினை அளிப்பதாகவும் ஜனாதிபதி  வலியுறுத்தினார்.

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தங்களது பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முதலாவது வாசகத்தினை நீக்குதல் மற்றும் மீண்டும் நாளை அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன். வாக்கெடுப்பினை பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி  வருகை தந்த கட்சித் தலைவர்கள் குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி அவ்விடயம் தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவ்வாறே பாராளுமன்றத்தினுள் அமைதி நிலையை உறுதி செய்து, ஜனநாயகம் மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் ஜனாதிபதி  பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டார்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 

அதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 

முதலாவதாக பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் தான் நடந்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். 

அதுமட்டுமின்றி இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்ப நிலை தொடர்பில் அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவோருக்கு ஆட்சி வழங்கப்படும் என்றும் நாடு இன்னும் ஓரிரு தினங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன்போது மற்றுமொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது அந்த விடயத்தை என்னால் பகிரங்கமாக தற்போது வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண்பது குறித்து இந்த கூட்டத்தின் கலந்துரையாடப்பட்டதாக ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்ததுடன், புதிய பிரதமர் தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.