(இராஜதுரை ஹஷான்)

அரசியல் தேவைக்காக கடந்த அரசாங்கத்தில் பாரிய நிதி மோசடியினை மேற்கொண்ட விமல் வீரவன்சவிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜயவீரவின் பெயரை சொல்ல எவ்வித தகுதிகளும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

மக்கள் விடுதலை முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

சட்டத்தில்  தண்டிக்கப்பட வேண்டிய ஊழல்வாதிகள்  முறையற்ற அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்று பாராளுமன்றத்தில்  அநாகரிகமான முறையில் நடந்து சர்வதேசத்தின் மத்தியில் கேலிப் பொருளாக பாராளுமன்றத்தினை மாற்றியமைத்து விட்டனர்.

பாராளுமன்றத்தில்  பெரும்பான்மை உறுப்பினர்களினால் நிராகரிக்கப்பட்ட அமைச்சரவையினால் தொடர்ந்து செயற்பட முடியாது என்ற அடிப்படை அரசியல் தெளிவில்லாமல்   பாராளுமன்றத்தில் அடாவடித்தனமாக ஆட்சியமைக்க முயற்சிக்கும்  மஹிந்த தரப்பினரின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.