இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.

நேற்று கண்டி பல்லேகலையில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் மற்றும் ஷாம் குர்ரன் தலா 63 ஓட்டங்களையும், றோறி பேர்ன்ஸ் 43 ஓட்டங்களையும், அடீல் ரஷீத் 31 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

இதனையடுத்து நேற்றைய தினமே முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

ஆடுகளத்தில் திமுத் கருணாரத்ன 19 ஓட்டத்துடனும், மலிந்த புஷ்பகுமார ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் 26 ஓட்டத்துடன் இரண்டாம் நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டம் முன்னிலை பெற்றது. 

இலங்கை அணி சார்பாக ரோஷான் சில்வா 85 ஓட்டத்தையும், திமுத் கருணாரத்ன 63 ஓட்டத்தையும், தனஞ்சய டிசில்வா 59 ஓட்டத்தையும், அகில தனஞ்சய 31 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேக் லெச், அடீல் ரஷத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், மொய்ன் அலி 2 விக்கெட்டுக்களையும், ரூட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி எதுவித ஓட்டமும் பெற்றிருக்காத நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.