அன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோஷி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. 

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ர நெசனல் அமைப்பின் வெளிநாட்டு விவகார பணிப்பாளருமான அன்ரோ டினே அன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோஷி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் கேரளாவில் நடைபெற்ற கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசனின் திறந்த கராத்தே சுற்றுப்போட்டி நிகழ்வின்போது ஜக்கிய அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட மேற்படி அமைப்பின் நிர்வாக குழுவால் இந்த நாமம் வழங்கப்பட்டுள்ளது.

கராத்தே பிரதம ஆசிரியர் அன்ரோ டினேஸுக்கு  “சிகான்” நாமம் ஜக்கிய அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள கராத்தே தலைமை அமைப்புகளால் முன்னர் வழங்கப்பட்டிருந்தது. 

அன்ரோ டினேஸ் இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனத்தின் அங்கீகாரம் மற்றும் இலங்கை பாடசாலைகள் கராத்தே தோ சங்கத்தின் “ஏ” தர சிரேஸ்ட பயிற்றுனரும் ஆவார். 

சர்வதேச ரீதியாக கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ர நெசனல் அமெரிக்கா, சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் (யு.எஸ்.கே தலைமையகத்திற்கு உட்பட்ட) ஜப்பான் அமைப்புகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

இலங்கை தேசிய கராத்தே குமித்தே “ஏ” தர நடுவர் மற்றும் காட்டா “ஏ” தர மத்தியஸ்தர் தரத்தினையும் உடைய சிகான். அன்ரோ டினேஸ் இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் உறுப்பினராக 2018 மற்றும் 2019 இலங்கை விளையாட்டுதுறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தழிழ் தேசிய பத்திரிகையான “வீரகேசரி” இல் தற்காப்புக்கலை எனும் 100 கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு கலை தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு அன்ரோ டினேஸ் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தற்காப்புக்கலை வரலாறு மற்றும் நுட்பங்கள்” எனும் தமிழ் நூலின் ஆசிரியரான அன்ரோ டினேஸ் ஆரம்ப கலையை சென்செய் மோகனிடமும் உயர்தர கலையின் நுட்பங்களை பேராசான் சிகான்.பொனி ரொபட்ஸிடமும் மற்றும் சர்வதேச ரீதியாக சிங்கப்பூர், மலேஷியா, ஜப்பான், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கலையின் உயர் நுட்பங்களை கற்றதோடு அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகளில் தனது கறுப்புப்பட்டி டான் டிப்ளோமா தர போட்டிகளில் நேரடியாக கலந்துகொண்டு சித்தியடைந்துள்ளார்.

அன்ரோ டினேஸ் தேசிய கராத்தே சம்மேளனம் மற்றும் உலக கராத்தே சம்மேளனத்தின் றுமுகு 6ஆவது கறுப்புப்பட்டி டான் டிப்ளோமா தரத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.