பாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார்.

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. உரையாற்ற ஆரம்பித்த வேளை சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து இரு தரப்பிரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பினரும் சபாமண்டபத்துக்கு நடுவில் வந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டதுடன் சிலர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

மேலும் மஹிந்த அணியின் எம்.பி. ஒருவர் சபாநாயகரின் ஒலிவாங்கியை சேதப்படுத்த முற்பட்ட போது அவரின் கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தோடியதையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் சபாநாயகர் அமர்ந்திருந்த ஆசனத்தை சுற்றிவளைத்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டனர். மேலும் சிலர் குப்பை கூடைகளை கொண்டு தாக்க முயற்சித்தனர்.

மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசனத்தில் அமர்ந்து அமைதியாக சபையில் நடந்த குழப்பங்களை அவதானித்து கொண்டிருந்தார்.

பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ எதிரணியின் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சில உறுப்பினர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.

மோதல்கள் உச்சமடைந்த போது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சபையில் இருந்து வெளியேறினர்.

பாராளுமன்றில் ஏற்பட்ட கைலப்பில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் குப்பை கூடைகளை  சபாநாயகரை நோக்கி தூக்கியெறிந்ததையடுத்தே சபாநாயகர் எந்த வித அறிவிப்பையும் விடுக்காது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.