(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவரை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் விரட்டி பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அராலி செட்டியார்மடம் வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, சித்தங்கேணி பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு செல்வதற்காக சித்தங்கேணி சந்தியில் நின்ற பஸ்ஸில் ஏறி அமர்ந்துள்ளார்.  

விடுமுறை தினமான இன்று அப் பகுதியில் மக்கள் நடமாற்றம் குறைவாக இருந்துள்ள நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட   இரண்டு இளைஞர்களும் யுவதி இருந்த பஸ்ஸில்  ஏறியுள்ளனர். இதனையடுத்து குறித்த யுவதியை அவர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக பஸ்ஸில்  இருந்து இறக்கி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர்.

 யுவதி அவ்விரு இளைஞர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்துள்ளார். இதன்போது    ஒருவர் யுவதியை பலமாக தலையில் தாக்கியுள்ளார். நினைவிழந்த நிலையில் இருந்த யுவதியின் தலையில் தலைகவசத்தை அணிவித்ததையடுத்து அப்பகுதியிலிருந்து நவாலி பகுதியை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் நினைவுதிரும்பிய யுவதி தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். இதன்போது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் ஒன்றுதிரண்டு   மோட்டார்சைக்கிளை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர்.

 மோட்டார் சைக்கிள் நவாலி வளுக்கையாறு பகுதியில் எரிபொருள் இன்றி இடைநடுவே நின்றுள்ளது. இதன்போது பின்தொடர்ந்து வந்த இளைஞர்களிடம் குறித்த இரண்டு இளைஞர்களும் வசமாக சிக்கினர்.  

இதனையடுத்து இளைஞர்களினால் குறித்த யுவதி மீட்கப்பட்டதுடன்   இரு இளைஞர்களையும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

 கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் நவாலிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அதில் பிராதான நபராக செயற்பட்டவர் தனியார் வெதுப்பகம் ஒன்றின் வெதுப்பக பொருட்களை விற்பனை செய்யும் வாகனத்தின் சாரதியெனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  அவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நாளை ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.