(ஏம்.சி. நஜிமுதீன்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளருக்குரிய அதிகாரங்கள் எவருடைய அனுமதியும் ஆலோசனையும் இன்றி கட்சித் தலைமையினால் குறைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்ததைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதனாலேயே தான் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன்அலி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மநாட்டில் கலந்துகொள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடகையில்,   

தேசிய மாநாட்டின்போது கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையில் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளாதவர்கள் பற்றி மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தார். பகிரங்கமாக நடைபெற்ற தேசிய மாநாட்டில் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனினும் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சிக்குள் பிரச்சினை ஏதும் இருந்தால் அது தொடர்பில் கட்சிக்குள்ளேயே பேசி தீர்வு காண வேண்டும் என தற்போது ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறார். ஆனால் அவர் அதனைச் செய்திருக்க வேண்டும். அவர் அதனைச் செய்திருந்தால் வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும். எனினும் அவர் பிரச்சினை தொடர்பில் கட்சிக்குள் பேசி தீர்வு காணாமல் அதனை தேசிய மாநாட்டில் பகிரங்கமாகப் பேசி வீண் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். 

மேலும் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமையினால்தான் நான் அதிருப்தியடைதுள்ளதாக பிழையான கருத்தொன்று பரப்பபட்டுள்ளது. ஆனாலும் யதார்த்தம் அதுவல்ல. கட்சியின் செயலாளருக்குரிய அதிகாரஙகள் குறைக்கப்பட்டமையே அதிருப்திக்கான பின்னணியாகும். மேலும் பொதுச்செயலாளரின் அதிகாரக் குறைப்பானது தலைவரின் தனிப்பட்ட செயற்பாடாகும். ஏனெனில் அதிகாரக் குறைப்பு தொடர்பில் என்னிடமோ, வேறு உறுப்பினர்களிடமோ உயர்பீடத்திடமோ ஆலோசிக்காமல் தலைவர் அதனை மேற்கொண்டுள்ளார்.