அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பண்டிகை கடந்த 13 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இவ் விழாவில்  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவிக்கையில்,

“இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவை சேர்ந்த பல இலட்சம் கடின உழைப்பாளிகளுக்கு தாயகம் அமெரிக்கா” என புகழாரம் சூட்டினார்.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், அவரிடம் விரைவில் பேசுவேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கொண்டாட்டத்தையொட்டி அவர் தனது  சமூக வளைத்தளமான டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

குறித்த பதிவில் அவர், “இன்று (நேற்று முன்தினம்) நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இங்கே கூடி உள்ளோம். 

தீபாவளி பண்டிகை அமெரிக்காவிலும், உலககெங்கும் உள்ள புத்த மதத்தினர், சீக்கிய மதத்தினர், சமண மதத்தினர் ஆகியோருக்கு விடுமுறை கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 

தீபாவளி ஒளியேற்றுவதற்கு கோடானுகோடி மக்கள் குடும்பங்களாக, நண்பர்களாக கூடி உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்தப் பதிவில் அவர் இந்துக்களை குறிப்பிட்டு வாழ்த்த மறந்து விட்டார். 

இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். சி.என்.என். டெலிவிஷனின் பாராளுமன்ற செய்தியாளர் மனு ராஜூ இதை குறிப்பிட்டு பதிவிட்டார். உடனே 2 ஆவது முறையாக ட்ரம்ப் டுவிட்டர் பதிவிட்டார். 

ஆனால் அதிலும் இந்துக்களை அவர் மறந்து விட்டு விட்டார்.மீண்டும் அந்த செய்தியாளர் ட்ரம்பின் தவறை சுட்டிக்காட்டினார்.

அதைத் தொடர்ந்து 3 ஆவது முறையாக ட்ரம்ப் தனது டுவிட்டரில் இந்துக்களையும் சேர்த்து பதிவிட்டார். 

அதில் அவர், “இந்து மக்களின் தீபங்களின் விழாவான தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. (தீபாவளி கொண்டாட) வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறை மிக மிக சிறப்பான (இந்து) மக்களை கொண்டுள்ளது” என குறிப்பிட்டடு பதிவிட்டுள்ளார்.