வவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

நாட்டின் காலநிலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீரற்ற காலநிலை காரணமாக கஜா சூறாவளியானது யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக கடுமையான காற்று வீசக்கூடும் என்பதுடன், நாளை மாலை கடுமையான மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், முப்படையினர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன அனர்த்த நிலையை எதிர்கொள்ள கூடிய நிலையில் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்த அவசர நிலைமைக்கு ஏற்ப பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, கடந்த நான்கு நாட்களாக அதிகாலை தொடக்கம் காலை 8 மணிவரை கடுமையான பனிமூட்டம் காணப்படுவதுடன், ஏ9 வீதியில் பயணிக்கும் சாரதிகள் கடும் சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.