ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் விரும்பக்கூடிய தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னர் கடந்த பல தசாப்தகாலமாக விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

எனவே அவ்வாறான நாட்டிலே சிறுபான்மை மக்களின் அதிகபட்ச ஆதரவை பெற்றுக்கொண்டு, நாட்டில் மக்கள்  நிம்மதி சந்தோசத்தை எதிர்பார்து வெற்றிபெறச்செய்த ஜனாதிபதி கடந்த 26 ஆம் திகதி மிகவும் மொசமானதொரு தவறை மேற்கொண்டார். அவறின் தவறு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இவ்வாறான தவறை அவர் செய்மாட்டார் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

அதேபோல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி இந்த அரசாங்கத்தை தோற்கடித்திருக்கின்றது. எனவே நாட்டில் சமாதானம் நிலைபெறவேண்டும் எனறே மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

அதனால் ஜனாதிபதி 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.