(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும், சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர், நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற சம்பிரதாயங்களையும், நிலையியற் கட்டளைகளையும் மீறி பலவந்தமாக அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 

நிலையியற் கட்டளைகளை மீறி சபை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பு செல்லுப்படியற்றதாகும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த  மாதம் 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த  ராஜபக்ஷவை  நியமித்து அமைத்திருந்த புதிய அரசுக்கும், பிரதம அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 122 பெரும்பான்மை வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டிருந்தது. 

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று பாராளுமன்ற  குழு அரையில் இதன்போதே ஆளும் தரப்பு எம்.பி.க்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இச் சந்திப்பில் சபை முதல்வர் தினேச் குணவர்தன, நிமல் சிறிபாலடி சில்வா, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜெயந்த, பந்துல குணவர்தன, பைஸர் முஸ்தபா, கெஹெலிய ரம்புக்வெல உட்பட பலரும் கலந்து கொண்டனர்.