இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள், ஒரு இருபதுக்கு 20 மற்றும் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இதில் ஒருநாள் போட்டியை 3:1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியதுடன் இருபதுக்கு 20 தொடரையும் கைப்பற்றியதுடன்.

அத்துடன்  கடந்த 09 ஆம் திகதி நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 75.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸுக்கா 285 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோஸ் பட்லர் மற்றும் ஷாம் குர்ரன் தலா 63 ஓட்டங்களையும், றோறி பேர்ன்ஸ் 43 ஓட்டங்களையும், அடீல் ரஷீத் 31 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றூவான் பெரேரா 4 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கை அணி முதலாம நாள் ஆட்ட நிறைவின்போது 12 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஆடுகளத்தில் திமுத் கருணாரத்ன 19 ஓட்டத்துடனும், மலிந்த புஷ்பகுமார ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தமை குறிப்பிடத்தக்கது.