"சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் கிடையாது" என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதையடுத்து பாராளுமன்றம் தற்காலிகமாக நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே நாமல்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு,

“கடந்த மூன்றரை ஆண்டுகளாக சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறான பக்கசார்பான செயற்பாடுகளேயே செய்து வருகிறார்.

நிலையியற் கட்டளைகளை மீறி அரசியலமைப்பிற்கு எதிராக ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாகவும் அவரது செயற்பாடுகள் காணப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு 113 பலம் இருப்பதை நிரூபித்து காட்ட முடியும் என்றால் ஆவணம் ஒன்றை கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க வேண்டும்.

அவ்வாறான நிலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்வார். மாறாக இவ்வாறான காரியங்களில் ஈடுபட கூடாது.

இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளார். ஆனால் சபாநாயகருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் கிடையாது.

அதனால் சபாநாயகரின் செயற்பாடுகளில் எமக்கு நம்பிக்கை இல்லை அவரின் செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.