(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைதத்திரிபால சிறிசேன - மஹிந்தராஜபக்ஷ இணைந்த அரசாங்கத்திடம் பெரும்பான்மை காணப்படுவதாக நம்பியே அரசாங்கத்துடன் இணைந்தேன். 

எனினும் இன்று அவர்களால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது.அவ்வாறு பெரும்பான்மை இல்லாத போது அதனை அரசாங்கமாக ஏற்க முடியாது. எனவே தான் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். 

அத்துடன் நான் அமைச்சரவை பதவியை ஏற்றிருந்தேனே தவிர ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகவில்லை. ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சராகவே செயற்பட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். 

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் சமர்பித்த நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய அரசாங்கத்தில் வகித்த அமைச்சு பதவியை வசந்த சேனாநாயக்க இராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார். 

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.