வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்பட்ட தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்று காலை  முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, 

கடந்த 9 ஆம் மாதம் நடுப்பகுதியில் உலக உணவுதிட்டத்தால் மூவாயிரம் தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவு வழங்கபட்டதாகவும், இன்றுவரை அந்த உணவுகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை, சமையலுக்கு பொறுப்பானவர்களிடம் வினவியபோது சமைப்பதற்காக தமக்கு வழங்கபடவில்லை எனதெரிவிக்கின்றனர். 

எனவே அதில் ஊழல் நடைபெற்றுள்ளது, அதன் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக எமக்கு தெரிவிக்கபடுகின்றது. அத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வேறு நிகழ்விற்காக பயன்படுத்தபட்டிருக்கிறது. அத்துடன் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினமே மீன் உணவு சமைப்பதற்காக வழங்கபட்டுள்ளது. எனவே இது தொடர்பாக வலயகல்வி அலுவலகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்கள்.

பாடசாலை அதிபர் இவ் விடயம் தொடர்பாக தெரிவிக்கும் போது எமது பாடசாலையில் அதிகமான இந்து ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களும் இருக்கின்றனர்.  தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவு இந்துக்களின் விரதகாலங்களிலேயே வழங்கப்பட்டது. தற்போது விரதகாலம் முடிவடைந்துள்ளதால் இன்றிலிருந்து குறித்த உணவு வழங்கபட இருந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.