அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.

அத்துடன் சி.என்.என். தொலைக்காட்சியின் நிருபர்  ஜிம் அகோஸ்டாவுக்கு மீண்டும் வெள்ளை மாளிகை நிருபர் அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

வெள்ளை மாளி­கையில் கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது ஊட­க­வி­ய­லா­ள­ரான  ஜிம் அகொஸ்டா  கேள்­வி­யொன்றைக் ட்ரம்பிடம் வினவியபோது, வெள்ளை மாளிகை   பெண் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் அவ­ரி­ட­மி­ருந்த  ஒலி­வாங்கி உப­க­ர­ணத்தை பறிக்க முயற்­சித்­துள்ளார்.

இந்­நி­லையில் அது தொடர்பில் வெள்ளை மாளிகை  ஊடக செய­லாளர் சாரா ஹக்­கர்பீ சான்டர்ஸ் தெரி­விக்­கையில்,   

ஜிம்  தனது கரத்தை இளம் பெண்­ணொ­ரு­வரின்   (குறிப்­பிட்ட வெள்ளை மாளிகை உத்­தி­யோ­கத்தர்)  மீது வைத்­த­தா­லேயே  அவ­ரது ஊடக அனு­மதி அட்டை இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறினார். எனினும் மேற்­படி குற்­றச்­சாட்­டுக்கு ஜிம் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்க இடைத் தேர்­தலில்  குடி­ய­ரசுக் கட்சி  பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையின் கட்­டுப்­பாட்டை இழந்த அதே­ச­மயம் பாரா­ளு­மன்ற செனட் ச­பையில் தன்னைப் பலப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளமை குறித்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி  ஊட­க­வி­ய­லா­ளர்­களின்  கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்துக் கொண்­டி­ருந்த வேளையி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது  மத்­திய அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து  அமெ­ரிக்­காவை நோக்கி வரும் குடி­யேற்­ற­வா­சி­களை  அமெ­ரிக்கா மீதான உலக ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்­பிட்­ட­மைக்கு  சவால் விடுக்கும் கேள்­விக்­க­ணை­களை  ஜிம் தொடுத்­தி­ருந்தார்.

அத்­துடன் இன­வாதம் மிக்­க­தாக நோக்­கப்­படும்  குடி­யேற்­ற­வா­தத்­திற்கு எதி­ரான  டொனால்ட் ட்­ரம்பின் பிர­சா­ர­மொன்று குறித்தும் அவர் இதன்­போது கேள்வி எழுப்­பினார்.

மேலும் 2016  ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்­யாவின் தலை­யீடு குறித்து ஜிம் கேள்­வியை  கேட்க முயன்ற போது டொனால்ட் ட்ரம்ப்   ஒலி­வாங்­கியை  அகற்­று­மாறு பல தட­வைகள் அவ­ருக்கு உத்­த­ர­விட்டார்.  இதனையடுத்து வெள்ளை மாளிகை பெண்  உத்­தி­யோ­கத்தர் ஒருவர்  அவ­ரது கரத்திலிருந்த ஒலிவாங்கியைப் பறிக்க முயற்சித்த போது  ஜிம் அவருடன் போராடுகையில் அவரது கரம் அந்த உத்தியோகத்தர் மீது தொடுகையுற்றுள்ளது.

அச்சமயத்தில் ஜிம், 'மன்னியுங்கள் அம்மா " என அவரிடம்   மன்னிப்புக் கோரியிருந்தார்.

இந் நிலையிலேயே அகோஸ்டாவின் ஊடக அனு­மதி அட்டை இரத்துச் செய்யப்பட்டதை காரணமாக கூறி அமெரிக்க மாகாண நீதிமன்றத்தில் சி.என்.என். தொலைக்கட்சி வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும் ஜனாதிபதி ட்ரம்ப், அதிகாரிகள் ஜான் கெல்லி, சரா சாண்டர்ஸ் உள்ளிட்ட்ட 6 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனவே விரைவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் அகோஸ்டா வெற்றிகரமாக வெள்ளை மாளிகை அனுமதியை பெறுவார் என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.