இதயத் தசைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பே  மாரடைப்பு என வைத்தியர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

ஒருவருக்கு ஒரு முறை மாரடைப்புவந்தால் அவருக்கு அவரின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகள் குறைந்துவிடும் என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருக்கிறது. ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா...? ஆனால் இது தான் உண்மை என்கிறார்கள் இதய  வைத்திய நிபுணர்கள்.

பெண்களில் பலருக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஒரளவிற்கு  இருக்கிறது. ஆனால் ஒராண்டில் இறக்கும் பெண்மணிகளில் ஐம்பது சதவீதத்தினருக்கு மேல் இதய நோயால் தான் உயிரிழக்கின்றனர் என்கிறது ஆய்வு.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் குழந்தைகள் இதய கோளாறுகளுடன் தான் பிறக்கிறார்கள் என்கிறது மற்றொரு ஆய்வு. அதனால், பெண்கள் இதயம் தொடர்பான நோய்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு பெறவேண்டும் என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

எம்முடைய உடலில் பிறக்கும் போதிலிருந்து தொடர்ந்து இயங்கும் இதயத்தின் துடிப்பு நின்று போனாலோ அல்லது இயல்பான அளவிற்கு துடிக்காமல் வேறு ஏதேனும் வகையில் பாதிக்கப்பட்டாலோ அசுத்த இரத்தமானது இதயத்திற்குள்ளேயே தேங்கிவிடும்.

உடலிலுள்ள திசுக்களுக்கு சக்தியை அளிக்கும் குளுக்கோஸ் மற்றும் தாது உப்புகள் தேவையான அளவிற்கு கிடைக்காது போகும். இதனால் திசுக்கள் பாதிப்படையும். அந்த தருணத்தில் செல்கள் தங்களைத் தாங்களே புதுபித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இறுதியில் உடல் செயலிழந்து போகும். உயிரிழப்பும் நேரக்கூடும்.

ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு முக்கியமான காரணமாக கண்டறியப்பட்டிருப்பது இதயத் தசைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு. இத்தகைய அடைப்பு ஒரு முறை ஏற்பட்டால் அவர்களின் ஆயுளில் ஒன்பரை முதல் பத்து ஆண்டுகள் குறைந்துவிடும் என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

அதனால் மாரடைப்பு ஏற்பட்ட பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்பதைவிட இத்தகைய மாரடைப்பு வருமுன் காத்து, அதன் மூலம் எம்முடைய வாழ்க்கையில் ஒன்பதரை ஆண்டு கால வாழ்க்கையை இழக்காமல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.