அமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹவாய் மாகாண அமைச்சர் துளசி கபார்ட் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் விடயம் குறித்து லோஸ் ஏஞ்சல்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்திய –அமெரிக்க வைத்தியர் சம்பத் சிவாங்கி, துளசி கபார்டை அறிமுகப்படுத்துகையில், 

“எதிர் வரும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக துளசி கபார்ட் பொறுப்பேற்கலாம்” என கூறியுள்ளார்.

சிவாங்கியின் இவ்வறிப்பிற்கு அந் நிகழ்விலிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பளித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த  துளசி கபார்ட் ஹவாய் மாகாணத்தின் 2ஆவது தொகுதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

துளசி கபார்ட் இந்தியர் அல்ல அவர் சமோவா தீவுகளைச் சேர்ந்த கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவர்.

துளசி கபார்ட்டின் தாய் கிறிஸ்தவராயிருந்தும் இந்து மதத்தின் பால் கொண்ட ஈர்ப்பால் இந்து மதத்திற்கு மதம் மாறியவர்.

துளசி கபார்ட் தனது சிறு வயதிலேயே ஹவாய் தீவுகளிற்கு குடியேறியுள்ளார்.

பின்னர் அவரும் இந்து மதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.

அமெரிக்காவின் பாராளுமன்றில் சமோவா தீவுகளை பூர்வீகமாக கொண்ட முதல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமை துளசி கபார்டையேச்சாரும்.

துளசி கபார்ட் அமெரிக்க அரசியலில் மிகவும் பிரபலமானவர். மேலும் அவர் அரசியல் சமூகத்தில் தனது அடிதளத்தை சரியாகவும் உறுதியாகவும் போட்டு அதன் வழியில் அவரும் அவரது குழுவினரும் பயணிக்கின்றனர்.

துளசி கபார்ட் 2020ஆம் ஆண்டிற்கான அமெரிக்க தேர்தலில் போட்டியிடுவாராயின் வெள்ளை மாளிகை அறிவிக்கும் தேர்தல் போட்டியில் பிரதான கட்சி சார்பாக போட்டியிடும் முதல் இளம் இந்து பெண் என்ற பெருமைக்குரியவராவார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு துளசி கபார்ட் வெற்றி பெற்றால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிபர் பதவி வகித்த முதல் இளம் பெண் என்ற பெருமையும் அவருக்கேயுரியதாகும்.