ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

அதன்படி இந்த சந்திப்பு இன்று மாலை 4:00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுத்துள்ள நிலையிலேயே சுதந்திரக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆராய்வதற்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில்  எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது. 

இந் நிலையில் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மஹிந்த தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இருதரப்பினரும் ஒன்றிணைந்து வெற்றிலை சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக போட்டியிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.