கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கும் வைகோவும் ஒரு காரணம் என அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

“ தி.மு.க.வும் -காங்கிரசும் பதினைந்து ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். ஏதாவது தமிழகத்திற்கு நன்மை கிடைத்ததா? இலங்கையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது கூட மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தி.மு.க. விலகவில்லை. 

இப்போது தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அந்த தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். ஒத்தக் கருத்துடையவர்களுடன் தான் தேர்தல் உடன்பாடு. எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருபவர்களுடன் அ.தி.மு.க. தலைமை கூட்டணி அமைக்கும். 

சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஒரு நாடகம். இருவரும் தங்கள் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள். நாளை மோடியுடன் கூட ஸ்டாலின் பேசுவார். மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி பலிக்கும் என சொல்லும் இதே வைகோ, கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற தேர்தல் உடன்பாடு செய்தார். 

இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான காங்கிரஸ் ஒழிய வேண்டும் என கடுமையாக சாடினார். மோடி வெற்றி பெறுவதற்கு வைகோவும் காரணம் அல்லவா? இதை மறுக்க முடியுமா? கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்பதற்கும் வைகோவும் ஒரு காரணம்தான். மூன்றாவது அணி அமைத்ததால் ஓட்டு பிரிந்து வெற்றி வாய்ப்பு பறிபோனதாக தி.மு.க.வினரே குற்றம் சாட்டினார்கள்.” என்றார்.