துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இறுதி மகாவலி திட்டமான மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்தை அடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபை திகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய மழை காலநிலையுடன் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் நீரத்தேக்கத்தில் முழுமையாக நீர் நிறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் வரட்சி காலநிலையிலும் எவ்வித தடையுமின்றி சிறுபோகம் மற்றும் பெரும் போகங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ரஜரட்ட விவசாய சமூகங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இன்று முற்பகல் மகாவலி அதிகார சபைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்குள்ள கேட்போர் கூடத்தில் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

நன்னீர் மீன் வளர்ப்பு, நீர் மின்சாரம் , சுற்றுலா கைத்தொழில் போன்ற கைத்தொழில் நடவடிக்கைகளும் மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

லக்கல புதிய நகர அபிவிருத்தி நடவடிக்கைகள், இலங்கையின் முதலாவது சுற்றாடல் கைத்தொழிற் பூங்கா, விசேட சுற்றாடல் வலய திட்டம் மற்றும் விவசாய திட்டங்களின்  முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மகாவலி வலயங்களில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி  கவனம் செலுத்தியதுடன், விரைவாக அந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர். 

அதனைத் தொடர்ந்து கொழும்பு காலி வீதியிலுள்ள தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு சென்ற ஜனாதிபதி, அதன் நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், பணிக்குழாமினருடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்துள்ள மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி சிறந்த மக்கள் சேவையை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தின் வரவேற்பு கருமபீடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, அதன் நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தரும் அதிதிகள் தங்கியிருக்கும் இடத்தின் வசதிகளையும் பார்வையிட்டார்.