(இரோஷா வேலு) 

பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. எனினும் சட்டவிரோதமான வகையில் பாராளுமன்றை கலைத்து தேர்தலொன்றை ஜனாதிபதி அறிவித்து இருப்பது சர்வாதிகார நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,   உயர் நீதிமன்றைம் இதனை கருத்தில் கொண்டு ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களுக்கு பிறகு அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரிக்கை முன்வைக்கப்படாதவிடத்து 19 ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியால் பாராளுமன்றை கலைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக ஐ.தே.க. உள்ளிட்ட கட்சித் தலைவர்களினால் இன்று உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன்போது அங்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.