கொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் காணப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என சுமார் 15 க்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்பட்டுள்ளன.

இந்நிலையில், மனுதாரர்களுக்கு அறிவிப்பு விடுப்பதற்காக, விசாரணைகள் பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, மனுதாரர்கள் தங்களுடைய சமர்ப்பிப்புகளை முன்வைக்கின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள், பிரதமர் நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

 

இந்நிலையில், கட்சிகளின் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்ற வளாகப்பகுதியில் குழுமியுள்ளதால் அப் பகுதியில் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆதரவாளர்களை பொலிஸார் அகற்றமுற்பட்டபோது அங்கு முறுகல் நிலை தோன்றியமை குறிப்பிடத்தக்கது.