இலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. 

அந்த வகையில் விசேட தேவைகளைக் கொண்ட மக்கள் உட்பட பொதுமக்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் ஆகிய செயற்பாடுகளின் மூலமாக சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை இலக்காகக் கொண்டு பல்வேறு வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை இது வரையில் அது பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மத்தியில் மரநடுகையை ஊக்குவிக்கும் வகையில், முள் சீத்தா, மாதுளை. மா மற்றும் ஜம்பு போன்ற பயன்தரும் மரக்கன்றுகளை இந்நிறுவனம் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பது தொடர்பில் சமூகத்திற்கு அறிவுரையாக அமைந்துள்ள நற்செய்திகளைக் கொண்ட அறிவிப்புப் பலகைகளை வாரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், வாரியப்பொல மாவட்ட வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

Ebony Holdings நிறுவனத்தின் பணியாளர்களும் முகாமைத்துவ அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் தாமாக முன்வந்து பங்குபற்றி தமது மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளதுடன் வாரியப்பொலவில் அமைந்துள்ள மகாகெலிய மகா வித்தியாலயம் மற்றும் ஸ்ரீ சுமங்கல மகா வித்தியாலயம் போன்ற பல்வேறு பாடசாலைகளுக்கு புத்தகங்கள் மற்றும் ஒலி ஏற்பாடு சாதனங்களையும் அவர்கள் நன்கொடையாக கையளித்து வைத்துள்ளனர்.

Ebony Holdingsநிறுவனம் சமீபத்தில் முன்னெடுத்துள்ள வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டம் தொடர்பில் அதன் பணிப்பாளர் சபைத் தலைவரான ரஸ்மி ரஹீம் அவர்கள் கருத்து வெளியிடுகையில் “Ebony Holdings நிறுவனமானது எப்போதுமே சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மைபயக்கின்ற வகையில் பங்களிப்பாற்றுவதில் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

தொழிற்துறையில் எப்போதுமே ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதற்கு நாம் முயற்சி செய்து வருவதுடன்  பொறுப்புணர்வு மிக்க என்ற நிறுவனம் என்ற கோணத்தில் எப்போதுமே ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டு வருகின்றோம். எமது பிரதேசத்தில் நிலவுகின்ற மிகவும் பாரதூரமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் சிலவற்றிற்கு தீர்வளிக்கும் வகையிலான செயற்திட்டங்களை நாம் மிகவும் கவனமாக ஆராய்ந்து முன்னெடுத்துள்ளதுடன் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு மீது நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டினை தொடர்ந்தும் வளர்ப்பதே இச்செயற்பாடுகளின் பொதுவான நோக்கமாகும்.

எமது சமூகத்திற்கு எம்மாலான சேவைகளை நாம் தொடர்ந்தும் மகிழ்ச்சியுடன் ஆற்றி வருவதுடன் எதிர்காலத்தில் இன்னும் பல வர்த்தக சமூகப்பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

எமது சமூகத்தில் நிலவுகின்ற மிகவும் பாரதூரமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வர்த்தகத்துறையின் பொறுப்புணர்வின் தேவையை இனங்கண்டுள்ள Ebony Holdings தான் தொழிற்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே பல்வேறு வர்த்தக சமூகப்  பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. கடற்கரைப் பிரதேசங்களை சுத்தம் செய்தல் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த நிவாரணம் வழங்குதல் போன்ற பல செயற்திட்டங்களை அது முன்னெடுத்துள்ளது. அதியுயர் தரம் கொண்ட முழுமையான ஆடையணித் தெரிவுகளுடன் இலங்கையில் நவநாகரிகத்தின் புதிய போக்குகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்ற ஒரு உள்நாட்டு ஆடையணி வழங்கல் நிறுவனமாக Ebony Holdings திகழ்ந்து வருகின்றது. 

வர்த்தகத்துறையில் இரு தசாப்த காலத்திற்கும் மேலாக நிலைபெற்றுள்ள இந்நிறுவனம் Vantage, Ebony மற்றும் Flash ஆகிய பெருமதிப்பு மிக்க ஆண்களுக்கான தனது ஆடையணி வர்த்தகநாமங்களுடன் இலங்கையின் நவநாகரிகத் துறையில் முன்னணி ஸ்தானத்தில் உள்ளது. மேற்குறிப்பிட்ட வர்த்தகநாமங்கள் அனைத்தும் நாடளாவியரீதியில் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.