1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர் .டி பண்டாரநாயக்க தனது அமைச்சரவையை உருவாக்கிய அடுத்த இரண்டு மாதங்களுக்குள்  தனிச்சிங்கள சட்டமூலத்தை கொண்டு வந்தார். 

 

1956  ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க அரசகரும மொழிகள் சட்டம் என்ற பெயருடைய அச்சட்டமூலத்தின் மூலம் அதுவரை ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டு சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக்காரணமாயிற்று. 

குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்களில் பணிகள் முடக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களையடுத்தே  பண்டாரநாயக்கா 1958 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க திருத்தச்சட்டமொன்றை கொண்டு வந்ததுடன்  தமிழ் மொழிக்கு சில விட்டுக்கொடுப்புகளை வேண்டா வெறுப்பாக ஏற்படுத்தினார். 

தன்படி அரசாங்க பாடசாலைகளில் போதனா மொழியாக தமிழ் , வடக்கு கிழக்குப்பகுதிகளில் அரச சேவைகளை தமிழ் மொழியில் இடம்பெறச்செய்தல், அரச சேவை ஆட்சேர்ப்பு பரீட்சைகளை தமிழில் நடத்துதல், அரசாங்க நிறுவனத்தின் தொடர்பு மொழியாக தமிழை பயன்படுத்தலாம் போன்ற விடயங்களே அவை.  இது சுருக்கமான வரலாறு. 

அதன் பின்னரே 13 ஆவது திருத்தச்சட்டத்தில் தமிழ் மொழியும் அரச கரும அல்லது ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை சிங்கள மொழியே சட்டவாக்க மொழியாக இலங்கையில் இருந்து வருகின்றது. இதை அடிப்படையாக வைத்தே அரசியலமைப்புச்சட்டத்தில் சிங்கள மொழியில் இருந்தவாறே பிரதமரை நியமித்தல் ,பதவி நீக்குதல் ,புதிய அமைச்சரவையை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இது 1956 களில் பண்டாரநாயக்கவால் நியாயப்படுத்தப்பட்ட தனிச்சிங்கள சட்டமூலத்தை மீண்டும் ஞாபகப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மேலும் இதை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஆமோதித்துள்ளார். ஆகவே  மொழிகள்  அமுலாக்கம் தொடர்பில்  என்னதான் திருத்தச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை சிறுபான்மையினரின் மொழி உரிமை தொடர்பான மேற்பூச்சு நடவடிக்கைகளாகவே இந்நாட்டில் இனியும் இருக்கப்போகின்றது. எந்த வகையிலும் சிங்கள மொழியின் மேலாதிக்கத்தை பேரினவாதம் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அரச கரும மொழியாகவும் இணைப்பு மொழியாகவும் தமிழும் ஆங்கிலமும் இருந்தாலும் எக்காலத்திலும் இவ்விரண்டு மொழிகளும் சட்டவாக்க மொழிகள் என்ற அந்தஸ்தை பெறப்போவதில்லை. 

ஆகவே இது ஒரு பௌத்த நாடு என்பதிலும்  ஆட்சி மற்றும் சட்டவாக்க மொழிகள் சிங்களம் என்ற விடயத்தையும்  இந்நாள் மற்றும் முன்னாள்  ஜனாதிபதிகளான மைத்திரிபால மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும்  அழுத்தி கூறியுள்ளார்கள். 1956 ஆம் ஆண்டு சம்பவத்தை மீண்டும் இது ஞாபகப்படுத்துவதாக இருக்கும் அதே வேளை  சுதந்திரக் கட்சியின் பாரம்பரியத்தையும் இவர்கள் நிலைநிறுத்தியுள்ளனர். 

இலங்கையில் உள்ள சட்டங்களைப்பொறுத்தவரை சிங்கள மொழியில் உள்ளவற்றை மட்டுமே நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்கின்றன. அதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியதியும் இருக்கின்றது. இந்நிலையில் தேசிய நல்லிணக்கத்தில் மொழிகளின் வகிபாகம் குறித்து வாய் கிழிய பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. ஆகவே அது தொடர்பான அமைச்சுக்களினாலும் என்ன பயன் ஏற்படப்போகின்றது என்று தெரியவில்லை. 

அமைச்சர் வாசுவின் பங்கு 

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த வாசுதேவ நாணயக்காரவிற்கு தற்போது தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் என்ற அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அரச கரும மொழிகளில் தமிழ் மொழி அமுலாக்கத்தை துணிச்சலாக முன்னெடுத்தவர் வாசு. பல சந்தர்ப்பங்களில் அரச நிறுவனத்தலைவர்களை வெளிப்படையாகவே இது தொடர்பில் விமர்சித்திருந்தார். 

பல்வேறு பட்ட அரச பணிகள் தொடர்பான படிவங்கள் சிங்கள மொழியில் மட்டும் இருப்பதை கண்டித்தார். அரசாங்க அதிகாரிகளே தேசிய மொழிக்கொள்கையை மீறுவதை வெளிபடுத்தினார். இவரது காலகட்டத்திலேயே தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பிலான சர்ச்சை உச்சத்தை அடைந்திருந்தது. 

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எந்தத் தடைகளும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இது பேரினவாத சக்திகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. வாசுதேவ கடும் விமர்சனங்களுக்கும் உட்பட்டிருந்தார். அவர் ஓர் இடது சாரி என்ற காரணத்தினால் மொழி மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எந்த வித பக்கச்சார்புமின்றி கருத்துக்களை தெரிவிக்க முடிந்தது, ஆனால் நாட்டின் சிங்கள மேலாதிக்கமோ அவரை ஒரு சிங்கள பௌத்தராகவே பார்க்க விரும்பியது. அதன் காரணமாகவே அவரால் முன்னெடுக்கப்பட்ட பல செயற்பாடுகளை அரசாங்க நிறுவனங்களின் சிங்கள அதிகாரிகள் புறக்கணித்தனர். இதை அரசாங்கமும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவருக்குப்பிறகு நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த அமைச்சுப்பதவியை மனோ கணேசன் வகித்தார். ஆரம்பத்தில் ஒரு சிங்கள பௌத்தருக்கே மொழி அமுலாக்கம் தொடர்பில் அத்தகைய சவால்களும் எதிர்ப்பும் இருந்திருக்குமென்றால் சிறுபான்மை தமிழ் பிரதிநிதிக்கு எத்தகைய சவால்கள் இருந்திருக்கும் என்பதை கூறத்தேவையில்லை. அப்படியே இவருக்கும் நடந்தது. 

அரசாங்க திணைக்களங்கள் பெரும்பாலானவற்றில் மொழிக்கொள்கையானது அமுல்படுத்தப்படாமலேயே இருந்தது. இதை நல்லாட்சி அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்ததில் பெரும்பங்கு வகித்தது சிறுபான்மை மக்களே என அவ்வப்போது இம்மக்களை ஞாபகப்படுத்தும் அறிக்கைகளும் உரைகளும் மட்டுமே அமைச்சர் மனோ கணேசனிடத்திலிருந்து வந்தன. 

தற்போது மீண்டும் அந்த  பொறுப்பை எடுத்துள்ள அமைச்சர் வாசுதேவ இவ்விடயத்தில் என்ன செய்யப்போகிறார் என்பது முக்கிய விடயம்.. ஏனெனில் ஒரு நாட்டின் சட்டமானது அங்கு வாழ்ந்து வரும் எல்லா இன மக்களுக்கும் பொதுவானது என்றால் எல்லா மொழிகளிலும் அது ஒரே அர்த்தத்தை கொண்டதாக அல்லவா இருக்க வேண்டும்? 

தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் இல்லாத சொற்பிரயோகங்கள் சிங்கள மொழியில் மட்டும் இருந்தால் ஏனையோர் அச்சட்டங்களை எவ்வாறு விளங்கிக்கொள்ளப்போகின்றனர்? தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உள்ளவாறான அரசியல் அமைப்புச்சட்டங்கள் பற்றியே இன்று இவ்விரு மொழிகளிலும்  இயங்கும் பாடசாலைகளிலும் போதிக்கப்படுகின்றது. சிற்சில சந்தர்ப்பங்களில் இதை அடிப்படையாகக்கொண்டே வாதங்கள் ,பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் நாட்டின் எல்லா பிரஜைகளும் சட்டங்கள் பற்றிய தெளிவை மும்மொழிகளிலும் தெரிந்து வைத்திருக்கின்றனரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. 

மொழி உரிமை மீறல் இல்லையா? 

அரசியலமைப்பின் சிங்கள மொழியில் உள்ளவாறே தான் செயற்பட்டிருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். 13 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தமிழும் சிங்களமும் ஆட்சி (நிர்வாக) மொழிகள் . அப்படியிருக்கும் போது அரசியலமைப்பில் சிங்கள மொழியில் உள்ளவாறு தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு இல்லை என்பது மொழி உரிமை மீறல் அல்லவா ?அது குறித்து புதிய அரச கரும மொழிகள் அமைச்சர் என்ன கூறப்போகின்றார்? அல்லது இப்படியான ஓர் அமைச்சு  அரசியலமைப்பு மொழிகள் விடயத்தில் தலையிட  முடியாதா போன்ற கேள்விகள் எழுகின்றன. இங்கு மொழி சமத்துவமின்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

 அதுவும் தற்போதைய அரசியல் நெருக்கடி சூழ்நிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அரசியலமைப்பு மீறப்பட்டது குறித்தே  அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பௌத்த மேலாதிக்க சிந்தனைகள் கொண்ட தேசிய தலைவர்கள் இதை சிங்கள மக்களிடத்தில் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை நன்கு திட்டமிட்டே செயல்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக உருவானதே  அரசியல் அமைப்பின் சிங்கள வாசகங்கள் விவகாரம். சிங்களத்தில் இருக்கின்ற அரசியல் யாப்பின் 48(1) உறுப்புரையிலிருக்கின்ற வாசகங்களின் அடிப்படையிலேயே  ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதாகவும் அவருக்குப்பதிலாக மஹிந்தவை பிரதமராக நியமித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்து விட்டார். 

நாட்டின் பேரினவாத சிந்தனையாளர்களை திருப்பதிப்படுத்த இது போதாதா? என்னதான்   கட்சி மற்றும் கொள்கைகள் அடிப்படையில் பெரும்பான்மையினத்தவர்கள் வேறுபட்டு நின்றாலும் மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் அனைவருமே ஒன்றாகத்தான் பயணிக்கின்றனர். நாட்டின் அரசியலமைப்புச்சட்டத்தை விட வேறு ஒன்று உயர்வானதாக இல்லை. ஆகவே அதையும் மீறி செயற்பட முடியாத அளவுக்கு அங்கு சிங்கள மேலாதிக்கம்  செல்வாக்கு செலுத்துகின்றது. ஆகவே, அவர்களைப்பொறுத்த வரை தேசிய நல்லிணக்கம் என்பது ஒரு மொழி, ஒரு மதம், ஒரு நாடு என்ற ரீதியிலான அரசியல்பயணம் தான். அதை விட வேறொன்றுமில்லை. 

 சிவலிங்கம் சிவகுமாரன்