(எம்.எப்.எம்.பஸீர்)

 நண்பர்களுடன் சேர்ந்து தனது சொந்த மகளை கடுமையான பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் 26 வயதுடைய தந்தை ஒருவரை கந்தானை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அத்துடன் அவரது இரு நண்பர்கள்,  சம்பவம் தொடர்பில் தெரிந்திருந்தும் தகவல்களை மறைத்த சிறுமியின் பாட்டி ஆகியோரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  தெரிவித்தார். 

கைதான நால்வரும்  இன்றைய தினமே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் அவர்களில் பாட்டியும்  தந்தையின் நண்பர் ஒருவரும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் தந்தையும் மற்றொரு நண்பரும்  இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

 அத்துடன் பாதிக்கப்பட்ட 6 வருடங்களும் 11 மாதங்களும் நிரம்பிய சிறுமி ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று   இரவு பதற்ற நிலவியதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர சுட்டிக்காட்டினார்.

 சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

 நேற்று கந்தானை பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ள 25 வயதான தாய் ஒருவர் தனது 7 வயது மகளை தனது கணவர் கடுமையாக பலாத்காரம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். 

மேலும் தனது கணவர் போதைக்கு அடிமையானவர் என குறிப்பிட்டுள்ள அவர் பல சமயம் தன்னையும் பிள்ளைகளையும் தாக்கியுள்ளதாகவும் குறித்த மகளுக்கு மேலதிகமாக ஆண் குழந்தையொன்றும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,

'பாடசாலைவிட்டு எனது மகள்  உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் போது அங்கு அவரது பாடசாலை உடைகள் சலவை செய்வதற்காக அவரது உறவினரான மாமியினால் எடுக்கப்பட்டுள்ளன. 

இதன் போது மகளின் உள்ளாடையில் இரத்தம் படிந்திருப்பதை அவதானித்த அவர் எங்கள் வீட்டுக்கு வந்து விடயத்தைக் கூறினார். 

நாம் மகள் பூ பெய்திவிட்டதாக நினைத்தோம். அவரை தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு கொண்டு சென்று சோதனைச் செய்தபோதே அவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.

வீட்டுக்கு வந்ததும் நாம் மகளிடம் இது தொடர்பில் வினவினோம். அப்போது மகள் அழுதவாறு தனக்கு நேர்ந்த கொடூரத்தை தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.