எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களினால் ஒருபோதும் அரசாங்கத்தை தோற்றகடிக்க முடியாது. எனவே அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அலட்டிக் கொள்ளவில்லை.  எதிர்க்கட்சிகள் வழமையாக முன்னெடுக்கும் செயற்பாடாகவே அதனை நோக்க வேண்டியுள்ளது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி, காணி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடகையில்,  

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதுபோல் இந்த அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளாமலில்லை. ஆட்சிக்கு வந்தது முதல் சகல துறைகளிலும் கவனம் செலுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு நன்கு தெரியும்.  

எதிர்த்தரப்பினர் குறிப்பிடுவதுபோல் அபிவிருத்திப் பணிகளை உடனடியாக பூர்திசெய்ய முடியாது. அதனை ஒழுங்காகத் திட்டமிட்டு படிப்படியாகத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.  மேலும் அபிவிருத்தியின்போது கடந்த அரசாங்கத்தைப்போல் ஊழல் செய்யாமல் நியாயமான முறையில் வேலைத்திடங்களை முன்னெக்க வேண்டியுள்ளது. மேலும் ஒதுக்கப்படும் நிதியினை அநாவசியமான முறையில் செலவிடாது முறையாக  செலவிடுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆகவே அதற்கேற்பவே வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.