(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாடுகள் குறிப்பிடுவது போன்று எந்தவொரு அரசியல் நெருக்கடியும் நாட்டில் இல்லை. சட்டப்பூர்வமாக ரணில் விக்ரமசிங்கவை நீக்கியுள்ளதால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குல நாடுகள் கவலையடைந்துள்ளன . 

ஏனெனில் அந்த நாடுகளில் செல்ல பிள்ளையாகவே முன்னாள் பிரதமர் இருந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க , 120 பேர் எமக்கு ஆதரவாக உள்ளனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தால் அந்த கட்சி மூன்றாக உடையும் எனவும் எச்சரித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இதனை தெரிவித்தார்;. 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாடுகள் கூறுவது போன்று இலங்கையில் அரசியல் நெருக்கடி இல்லை .  

அமெரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளினதும் செல்ல பிள்ளையான ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியமையிளாலேயே அவர்கள் கவலையடைந்துள்ளனர். 

எனவே 11 நாட்கள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரிய விடயமல்ல. 

சபாநாயகர் மாத்திரமல்ல யார் வேண்டுமானாலும் யாருக்கும் கடிதம் அனுப்பலாம். 

அது குறித்து நாம் கவனத்தில் கொள்ளத்தேவையில்லை. அடுத்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு பெரும்பாண்மையுடன் செல்வோம் என்றார்.