இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 6 ஆம் திகதி காலியில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக 342 ஓட்டங்களையும், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

இதன் பின்னர் 139 ஓட்ட முன்னிலையில் தனது இரணடாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தி, இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 462 ஓட்டத்தை நிர்ணயித்தது.

462 ஓட்டம் என்ற வெற்றியிலக்குடன் களமிங்கிய இலங்கை அணி நேற்று மூன்றாம் நாள் நிறைவின் போது எதுவித விக்கெட் இழப்புளுமின்றி 15 ஓட்டங்களை பெற்றது. 

இந் நிலையில் 15 ஓட்டத்துடன் போட்டியின் நான்காம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 85.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதனால் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 53 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 45 ஓட்டங்களையும், குசல் சில்வா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் தலா 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி 4 விக்கெட்டுக்களையும், ஜெக் லேச் 3 விக்கெட்டுக்களையும், அடீல் ரஷத் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா  ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

ரங்கன ஹேரத்தை வெற்றியுடன் வழியனுப்பி வைப்போம் என காலி டெஸ்டிற்கு முன்னதாக இலங்கை அணி தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்திருந்த நிலையில் இலங்கை அணி ரங்கன ஹேரத்தை ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.