நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாளினை கொடுத்து கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட இரு வாலிபர்கள் சம்மாந்துறை பொலிசாரின் சுற்றிவளைப்பில் நேற்று கைது செய்யப்பட்டனர்.சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே இப்னு அஸாரின் ஆலோசனையின் பேரில் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும்  சோதனை செய்த போது மேலும் 12 ஐந்தாயிரம் ரூபாய் நாணயதாள்கள் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட 12 நோட்டுக்களில் ஒரே இலக்கத்தை கொண்ட போலி நோட்டுக்கள் பத்தும் வேறு இலக்கத்தை கொண்ட நோட்டுக்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட போலி நாணய தாள்கள் உண்மையான நாணய தாள்களுக்கு ஒப்பானதாகவும் நோட்டின் நடுவில் உள்ள கம்பிகள் மாத்திரம் வித்தியாசமானதாகவும் காணப்பட்டன -

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறக்காமம் மற்றும் வரப்பத்தான்சேனை பகுதியை சேர்தவர்கள் எனவும் இவர்களை சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த போலி நாணயதாள்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் கொழும்பு நகரபகுதியில் வாழ்வருவது பற்றி தகவல் கிடைத்துள்ளதாகவும் இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எம்.கே.இப்னு அஷார் தெரிவித்தார்.