கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டியவுக்கு செல்லும் போது  கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் பயணித்த வேனானது, வெலிசறை கடற்படை முகாமுக்குள்  72 துண்டுகளாக வெட்டப்பட்டமையானது சாட்சிகளை மறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே சந்தேகிக்கப்படுவதாக சி.ஐ.டி. நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வாவுக்கு அறிவித்தது. குண்டு செயலிழக்கச் செய்வது குறித்த நிபுணத்துவம் பெற்ற, கடந்த 10 வருடங்களாக அத்துறையில் உள்ள பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திமுத் சுரங்க சமரநாயக்கவின் வாக்கு மூலத்தையும் மன்றுக்கு சமர்ப்பித்தே சி.ஐ.டி. இந்த  நிலைப்பாட்டை மன்றுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

மேற்படி இருவரும் காணாமல் அக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கு  நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது விஷேட மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக இந்த விடயத்தை சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோர் அறிவித்தனர். 

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பயணித்த, அவர்களில் லோகநாதன் என்பவருக்கு சொந்தமான வேன் துண்டு துண்டாக வெட்டப்படும் போது அங்கு இவ்வழக்கின் முதல் சந்தேக நபரான தற்போது பிணையில் உள்ள தற்போதைய கொமாண்டர் தர அதிகாரியான அனில் மாபா மற்றும் விளக்கமறியலில் உள்ள இரண்டாம் சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் சம்பத் தயாநந்த ஆகியோர் உடனிருந்து அப்பணியை செய்துள்ளதாகவும் அவர்களுடன் மேலும் இருவரும் இருந்ததாகவும் சி.ஐ.டியினர் தமது விசாரணை அறிக்கை ஊடாக  நீதிமன்றை தெளிவுபடுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்கள், காணாமல் ஆக்கப்பட்டுள்ள இருவரினதும் உடமைகளைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் ஏற்கனவே விசாரணையாளர்கள் கண்டறிந்த நிலையில், குறித்த வேனை துண்டுகளாக வெட்டியதற்கான காரணமாக சந்தேக நபர்களால் அதில் குண்டு இருப்பதாக தகவல் கிடைத்தமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 எனினும் அது பொய்யான காரணம் என்பதை வெளிப்படுத்த போதிய சான்றுகளை தற்போது சி.ஐ.டி.யினர் சேகரித்துள்ளனர். அவற்றை நேற்று அவர்கள் மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக நீதிவானுக்கு சமர்ப்பித்தனர். அத்துடன் 72 துண்டுகளாக வெட்டப்பட்ட வேன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையும்  நீதிவானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில், குறித்த வேன் வெட்டப்பட்ட முறைமை, அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணம் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்டவை தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி கிரைன்டர் மற்றும் நெருப்புடன் கூடிய வெட்டும் இயந்திரம் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந் நிலையில் குண்டு செயலிழக்கச் செய்வது குறித்த நிபுணத்துவம் பெற்ற, அது தொடர்பில் 23 இற்கும் அதிகமான உள் நாட்டு வெளிநாட்டு பாட நெறிகளை பயின்ற, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அத்துறையில் தொடர்ந்து இருக்கும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் உதவி  பொலிஸ் அத்தியட்சர்  திமுத் சுரங்க சமரநாயக்கவிடம்  சி.ஐ.டி. இது குறித்து வாக்கு மூலம் பெற்றுள்ளது.

அதில் அவர்,  குண்டு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டவுடன் எடுக்க வேண்டிய நடைமுறைகள்  குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் அவர் குறிப்பிட்ட எந்த நடை முறைகளையும் இந்த விடயத்தில் சந்தேக நபர்கள் பின்பற்றியிருக்கவில்லை என்றும், குறைந்த பட்சம் பொலிஸாருக்கு தகவல் கூட கொடுத்திருக்க வில்லை எனவும் சி.ஐ.டி. அறிக்கை ஊடாக நீதிவானுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் முகாமுக்கு வெளியே இருந்த வேனை, குண்டு இருப்பதாக சந்தேகித்து முகாமுக்குள் எடுத்துச் சென்று சோதனை செய்ததாக  சந்தேக நபர்கள் கூறுவதானது, வேடிக்கையானது எனவும் ஆபத்தைதெரிந்துகொண்டு எவரும் அவ்வாறு செயற்பட மாட்டார்கள் எனவும் சி.ஐ.டி. சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் வேனை வெட்ட கிரைன்டரும், நெருப்புடன் கூடிய ஒரு வெட்டு உபகரணமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் கூறும் நிலையில், உதவி பொலிஸ் அத்தியட்சர் திமுத் சுரங்க சமரநாயக்கவின் விளக்கத்தின் படி, குண்டு இல்லை என்பதை தெரிந்தே அவ்வாறு வெட்டி இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு குண்டு இருந்தால் இவ்வாறான உபகரணங்களால் வெட்டும் போது ஏற்படும் இரசாயன தாக்கங்களால் அது வெடித்திருக்கும் என்றும்  சி.ஐ.டி.  மன்றின் அவதானத்துக்கு கொண்டு வந்தது.

எனவே வேனில் குண்டு இல்லை என்பது நன்கு தெரிந்தே, சாட்சியங்களை மறைக்கும் நோக்கில் இந்த வேன் 72 துண்டுகளாக வெட்டப்பட்டிருக்க வேண்டும் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந் நிலையிலேயே இந்த விவகாரத்தில் கடத்தல், கொள்ளை, கொலை குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான  தற்போது கடற்படையின் சம்பூர் புலனாய்வு முகாமின் 2 ஆம் கட்டளைத் அதிகாரியாக செயற்படும் லெப்டினன் கொமாண்டர் சம்பத் தயானந்தவை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சி.ஐ.டி. மன்றில் முன்வைத்த விஷேட கோரிக்கைக்கு அமைய அவரிடம் சிறையில் வைத்து இன்று முதல் 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட நாட்களில் விசாரணைகளை முன்னெடுக்கவும் நீதிவான் அனுமதித்தார்.