ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சித் தாவிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான வியாழேந்திரனும் பங்குபற்றியுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவருக்காக கதிரையும் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர் இறுதி நேரத்தில் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றாததையடுத்து அவருக்காக ஒதுக்கப்பட்ட கதிரைஅப்புறப்படுத்தப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டது. 

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பு தொடர்பில் கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுலாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

தீர்மானிக்கப்பட்டிருந்ததன்படி தம்வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டுமானால், 2300 மில்லியன் ரூபா பணம் தமக்கு தேவையாக உள்ளதாக இராணுவத்தினர் இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாததத்துக்குள் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி கருத்து தெரிவித்ததுடன் இதற்காக சகல தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தக்கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.