ஏமனில் அரச ஆதரவு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டின் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 2015 ஆண்டு உள்நாட்டுப்போர் ஆரம்பமாகி நீடித்து வருகின்றது.

இதில் ஜனாதிபதி அப்துரப்பா படைகளுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு வழங்கி வருகின்றன.

அங்குள்ள 6 இலட்சம் மக்கள் வசித்து வரும் செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. 

அந்த நகரை மீட்பதற்காக ஜனாதிபதி ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம் வான்தாக்குதலும் நடந்து வருகிறது. 

இந் நிலையில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர் கொல்லப்பட்டதுடன் ஜனாதிபதி ஆதரவு படையைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அந் நகரை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்தும் படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.