(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்ற தேர்தலுக்கோ அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கோ நாங்கள் ஒருபோது செல்லமாட்டோம். பெரும்பான்மை உறுப்பினர்களுடனே எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றம் செல்வோம் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தற்போது நாங்கள் அமைத்திருக்கின்றோம். தேவையான நேரத்தில் அவர்களை நாங்கள் முன்னிலைப்படுத்த தயாராக இருக்கின்றோம். அதனால் எதிர்பாரக்க முடியாத பல  விடயங்கள் எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறும். தற்போது நாங்கள் 105 பேர் இருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சிக்கு 97பேர் மாத்திரமே இருக்கின்றனர். நாங்கள் தான் பெரும்பான்மையாக இருக்கின்றோம். மக்கள் விடுதலை முன்னணி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றது. 

மேலும்  தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருக்கின்றது. அதனால் அவர்களில் சிலரை எங்கள் பக்கம் திருப்பிக்கொள்ளலாம்.  அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீனின் கட்சி எங்களுடன் கலந்துரையாடி வருகின்றது. அவர்களின் கட்சியில் இருந்து உறுப்பினர்களை தனித்தனியாக எடுக்கலாம். என்றாலும் கட்சிகளை பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. அவர்கள் கூட்டா தீர்மானம் எடுக்க இருப்பதால் நாங்கள் அதில் கைவைக்கவில்லை. தேவை ஏற்படின் கைவைப்போம். அதுதொடர்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் நன்கு அறிந்துவைத்திருக்கின்றனர்.