(நா.தினுஷா)

பாராளுமன்றம் 14 ஆம் திகதி கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு  கட்டாயம் நடத்தப்படும். அதற்கு மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இல்லை. அதேபோன்று எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரம் தொடர்பான தீர்மானமும் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.  

பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயகர் தீர்மானிப்பார். அத்துடன் அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைத்து ஆட்சிமுறைமையை உறுதிப்படுத்துவதற்காக 19ஆம் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  

எனவே ஜனாதிபதிக்கோ அவரால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கோ பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிமைப்பட வேண்டியதில்லை. அரசியலமைப்பை மீறி  தொடர்ந்தும் செயற்படுவார்களாயின் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி - பாராளுமன்றம் கூட்டப்படும் போது பிரதமரின் இருப்பிடம் தொடர்பில்  பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமா?

பதில் - அரசியல் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் சபாநாயகர் கடந்த மாதம் 26 ஆம் திகதி இருந்த அமைச்சரவையையும் , பாராளுமன்ற உறுப்பினர்களையுமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார். ஆகவே பாராளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதனை தெளிவாக அறிவித்து பிரச்சினையை இலகுப்படுத்துவார் என்ற நம்பிக்கையுள்ளது.  

இது குறித்து சபாநாயகருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த போவதில்லை. ஜனநாயகத்துக்கு முக்கியதுவம் கொடுப்பவர் என்ற வகையில் சரியாக தீர்மானத்தை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது. 14 ஆம் திகதி இடம்பெறப்போவது ஆசனத்துக்கான வாக்கெடுப்பல்ல, பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையுள்ளதா அல்லது மஹிந்தவுக்கு பெரும்பான்மையுள்ளதா என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும்.