இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 7 ஓவர்களை எதிர்கொண்டு 15 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இப் போட்டியானது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி தனது முதல் இன்னிங்ஸுக்காக 342 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து நேற்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 68 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

139 ஓட்ட முன்னிலையில் நேற்றைய தினமே இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது எதுவித விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை பெற்றது.

இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆன இன்று 32 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 93 ஓவர்களை எதிர்கொண்டு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 322 ஓட்டத்துடன் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜென்னிங்ஸ் 146 ஓட்டத்தையும், பெஸ் ஸ்டோக்ஸ் 67 ஓட்டத்தையும், பட்லர் 35 ஓட்டத்தையும், பொக்ஸ் 37 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றூவான் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 462 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 

462 என்ற வெற்றியிலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸிக்காக களமிங்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது எதுவித விக்கெட் இழப்பின்றி 7 ஓவர்களை எதிர்கொண்டு 15 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் திமுத் கருணாரத்ன 7 ஓட்டத்துடனும், குசல் சில்வா 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். நாளை போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.