நிவித்திகல, வதுபிட்டிய பகுதியில் வியாபாரியொருவர் இனந்தெரியாத நபரினால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் இரத்தினபுரி - களவான பிரதான வீதியை வழிமறைத்து பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த 5 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் வியாபாரியொருவர் தனது கடையிலிருந்தபோது கடைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த குளிர்பான போத்தலை திருடியுள்ளார். இதனைக் கண்ட வியாபாரி இது குறித்து அவரிடம் வினவியபோது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியமையினால் வியாபாரி படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் நிலைமை மோசமடைந்து வருவதை கருத்திற் கொண்டு மேலதிக சிகிச்சைக்காக நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அவிசாவளை பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் நிவித்திகல, வதுபிட்டியவைச் சேர்ந்த  32 வயதுடைய பீ.டபிள்யூ. துசித்த என்பவ‍ரே உயிரிழந்தவார் ஆவார்.

இந் நிலையில் இச் சம்பவத்தை கண்டித்து, மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி இரத்தினபுரி களவான பிரதான வீதியை வழிமறைத்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்ற‍ை நேற்று மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.