(இரோஷா வேலு) 

சிலாபம் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவத்தில் 36 வயதுடைய சிலாபத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய ஜூட் ரொஷான் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். 

சிலாபம் ரிதீவல்ல கடற்பரப்பில் நேற்று  கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கான படகொன்றில் இருவர் கடலுக்குள் சென்றுள்ளனர். எனினும் இருவரின் ஒருவர் கடலலை உயர்வினால் கடலுக்கு வீழ்ந்து மூச்சுத் திணறி மரணித்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த நபரின் சடலமானது பொலிஸாரால் மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. 

இதனையடுத்து நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட மரண மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று காலை சடலமானது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.