இன்றைய சூழலில் சர்வதேச தலையீடே எமக்குத் தேவையாகவுள்ளது. இதற்கான சர்வதேசத்தின் வலுவான நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு எமது  அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

அரசியல் குழப்ப நிலை தொடர்பாக கூட்டமைப்பின் நிலை எவ்வாறு உள்ளது எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடந்துகொண்டிருக்கும் விதமானது அரசியல் அமைப்புக்கு மட்டுமன்றி ஜனநாயகத்துக்கும் விரோதமானது என்று உள் நாட்டில் மட்டுமன்றி சகல வல்லரசு நாடுகளும் கூறுகின்றன. மேலும் எவரும் இதற்கு ஆதரவாக கருத்துக்கள் கூறாது கண்டனங்களையே தெரிவித்து வருகின்றனர். இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் அரசியல் அமைப்பு ரீதியாக ஆட்சி மாற்றங்கள் நடைபெறவேண்டும். ஆட்சி நடைபெறவேண்டும் என்றே விரும்புகிறார்கள். 

இத்தகைய நிலை நீடிக்குமாயின் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு வழங்குகின்ற நிதிகள் கடன் வசதிகள் பல திட்டங்கள் தொடர்பில் இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றவுள்ளதாகத் தெரிவிப்பதுடன் மேலதிகமான திட்டங்கள்  அல்லது உதவிகளை செய்யமாட்டோம் என்று வலியுறுத்தி வருகின்றார்கள்.

இன்று ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகள் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வுவிடயத்தில் குறிப்பாக இனத்தின் விடுதலை இனப் பாதுகாப்பு போன்றவற்றுக்கு சிக்கலான நிலையே  உருவாகியுள்ளது. 

தேசிய அரசாங்கம் அமைந்தபோது ஒரு அரசியல் அமைப்புக்கான விடயங்கள் முன்னகர்த்தப்பட்டு வந்தன. காணிகள் ஓரளவுக்கு விடுவிக்கப்பட்டு வந்தன. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெ ளிநாட்டு நிதிமூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இன்று அரசியல் குழப்பம் ஏற்பட்டதனால்  இந்த நடவடிக்கைகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.