இலங்கை அதன் எதிர்காலம் தொடர்பில் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டிய மிகவும் நெருக்கடியான கட்டத்தை எட்டியிருக்கிறது.பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது, ஏனென்றால் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை. இடைக்காலப் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி நியமித்திருக்கிறார். இதே ராஜபக்சவுக்கு துரோகமிழைப்பதற்கு முன்னதாக அவரின் முன்னைய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்தான் சிறிசேன.

மறுமணம் செய்துகொண்ட சிறிசேன -- ராஜபக்ச ஜோடிக்கும் விவாகரத்துச் செயதவரான விக்கிரமசிங்கவுக்கும் இடையே மூன்றாவது தரப்பாக இருக்கும்  சபாநாயகர் கரு ஜெயசூரிய மறுமணத்தம்பதியருக்கு ஆதரவாக இருக்கும் பாராளுமன்ற அதிகாரிகளினதும் ஊழியர்களினதும் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனிடையே வெளிநாட்டுச் சக்திகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால், பாராளுமன்றம் அதன் கௌரவத்தை இழந்துவிட்டது. நாடு அதன் இறையாண்மையை இழந்துவிட்டது.ஜனநாயகம் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது.அது நகைப்புக்கிடமானதாகிவிட்டது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் ஒருவர் ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரிலும் மகிழ்ச்சியின் பேரிலுமா அதிகாரத்தில் இருக்கிறார்? ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு முன்னதாக வேறு இருவருக்கு அப்பதவியைக் கொடுக்கமுன்வந்ததாக சிறிசேன கூறியிருக்கிறார். அதனால் தனது மூன்றாவது தெரிவாக ராஜபக்ச இருந்தார் என்றும் அவர் சொன்னார்.சிறிசேன இன்னொருவருடன் காதலில் வீழ்ந்தால் ராஜபக்சவையும் பதவிநீக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?நாடு அரசியலமைப்பைப் பாதுகாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.தன்னிச்சையாக செயற்படுகின்ற ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகளை நிராகரிக்கவேண்டிய நேரமும் வந்துவிட்டது.

அரங்கேறியிருக்கும் அரசியல் நாடகத்தின் கதையின் சாராம்சம் நாடு சுதந்திரத்துக்குப் பின்னரான காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினாலும் முன்னெடுக்கப்பட்ட கட்சி அரசியல் வக்கிரப் போட்டாபோட்டி யுகத்துக்கு திரும்பிவிட்டது என்பதேயாகும்.இந்த போட்டாபோட்டியில் அகப்படுவதிலிருந்து தமிழ்த் தலைவர்கள் நீண்டகாலத்துக்கு முன்னரே விலகிவிட்டார்கள். எந்தவொரு பிரிவினருடனும் மீண்டும் இணைந்துகொள்வதற்கு அவர்கள் இப்போதும் விரும்பவில்லை.கொடூரமான உள்நாட்டுப் போருக்குப் பின்னரும்கூட தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன.

அதேவேளை மறுபுறத்தில் முஸ்லிம் தலைவர்கள் ( ஒரு சிலரைத் தவிர) ஆரம்பத்தில் இருந்தே தங்களுக்கு கூடுதல் சலுகைகளைத் தருவதாக உறுதியளித்த பிரதான கட்சிகளில் ஒன்றுடன் இணைந்துகொள்வதன்மூலமாக அரசியலில்  ஒரு வாணிப ரீதியான அணுகுமுறையையே கடைப்பிடித்தனர்.வெஸ்ட்மினிஸ்டர் முறையில் இருந்து கொல்வினின் அரசியலமைப்பு, பிறகு ஜே.ஆரின் அரசியலமைப்பு என்று அரசியலமைப்பு மாற்றங்கள் நடந்தேறியபிறகு முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் விளையாட்டைத் தொடருவதற்கான வாய்ப்புகள் படிப்படியாகக் குறுகிப்போயின.

இதை உணர்ந்துகொண்ட எம்.எச்.எம்.அஷ்ரப் தென்னிலங்கையில் போட்டாபோட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இரு பிரதான கட்சிகளுடனும் பெரிதாகப் பேரம்பேசும் நோக்குடன் முஸலிம்களை தனது குடையின் கீழ் கொண்டுவருவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தொடங்கினார்.அதனால் முஸ்லிம் சமூகம் இறுதியில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் மத்தியில் உள்ள தீயசக்திகளுக்கு முஸ்லிம் சமூகம் இரையாகும் ஆபத்து ஏற்பட்டது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் முட்டுக்கட்டைநிலை அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு நாட்டுப்பற்றுடைய சிங்களவர்களுடன் கைகோர்ப்பதற்கு  தமிழ்த் தலைவர்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் ஒரு பொன்னான வாய்பைக் கொடுத்திருக்கிறது.நாட்டுப்பற்றுடையவர்களாக இருந்து பாராளுமன்றத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் கௌரவத்தைக் காப்பாற்றுமாறு நான் முஸ்லிம் தலைவர்களை வேண்டிக்கொள்கிறேன்.சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ( அவர்களில் ஓரிருவர் மேன்மையுடைய சபைக்குள் பின்கதவால் நுழைந்தவர்கள்) தனிப்பட்ட சலுகைகளுக்காக ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஆதரிக்க முண்டியடித்துக்கொண்டு  ஓடுவதைக்காண பெரும் வேதனையாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது.அவர்கள் தங்களது நடத்தைகளுக்காக வெட்கப்படவேண்டும்.தற்போதைக்கு ஒரு தரப்பினரால் வரவேற்கப்பட்டாலும்  அத்தரப்பினர் தங்கள் மீது நிரந்தர நம்பிக்கையைக் கொண்டிருக்கப்போவதில்லை என்பதை இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைவிற்கொள்ளவேண்டும்.ஏனென்றால் எந்தநேரத்திலும் கூடுதல் விலைக்கு மற்றத்தரப்பினரால் அவர்களை வாங்கிக்கொள்ளமுடியும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது அரசியல் சந்தர்ப்பவாதம் முஸ்லிம் சமூகத்தின் தேசிய படிமத்தின்மீது அழியாத கறையை ஏற்படுத்திவிடும்.

சிங்கள சமூகத்தின் மத்தியில் உள்ள தேசப்பற்றுடைய பெரும்பான்மையானவர்களுக்கு இரு சிறுபான்மைச் சமூகங்களும் ஐக்கியப்பட்டு ஆதரவைக் கொடுக்கவேண்டிய தருணம் இதுவாகும்.அத்தகைய ஐக்கியம் இலங்கை அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் திறக்கும் என்பதுடன் என்றென்றைக்கும் நினைவிலுமிருத்தப்படும்.

- அமீர் அலி