யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வரலாற்றுத்துறையால் ஒழுங்குபடுத்தப்பட்ட “தமிழ் மொழியும் தமிழ்மொழி சார்ந்த மரபுரிமைகளும்” என்ற தலைப்பில் கடந்த (29.10.2018) அன்று  நடைபெற்ற பயிலரங்கம் இலங்கைத் தமிழரின் மரபுரிமை அடையாளங்களைச் சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

இப்பயிலரங்கிற்கு ஜெர்மனியைத் தலமையகமாகக் கொண்டு இயங்கும் “சர்வதேச தமிழ் மரபுரிமைமையத்தின்” நிறுவனரும், தலைவருமான கலாநிதி சுபாஜினி, பேராசிரியர் நாரயணன் கண்ணன், திருமதி மதுமிதா ஆகியோர் வருகை தந்து பெறுமதியான கருத்துரைகளை வழங்கியமை இப்பயிலரங்கின் முக்கிய நிகழ்வாக இருந்தது. 

இந்நிகழ்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதில் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனும், கலைப்பீடாதிபதி கலாநிதி சுதாகர் அவர்களும் மிகுந்த அக்கறை காட்டியதுடன் அதற்கு வேண்டிய உதவிகளையும் வழங்கியிருந்தனர். 

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் ஆசிரியர்களும், மாணவர்களும், கலைப்பீட ஆசிரியர்கள் மற்றும் யாழ்ப்பாண தொல்லியற் திணைக்கழக மற்றும் மத்திய கலாசார நிதிய ஆய்வு உத்தியோகத்தர்கள் உட்பட 200 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை தமிழரது மரபுரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தையும், அக்கறையையும் காட்டுவதாக இருந்தது. 

இந்நிகழ்வில் தொடக்க உரைநிகழ்த்திய பதில் துணைவேந்தர் பேராசிரியர் மிகுந்தன், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் மூத்த பேராசிரியருமான சிவலிங்கராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி சுதாகர் ஆகியோரின் ஆழமான கருத்துக்கள் தமிழர்களின் மரபுரிமைகளின் சிறப்புக்களையும், அவற்றை பாதுகாத்து ஆவணப்படுத்துவதில் பல்கலைக்கழகங்களுக்கு இருக்கவேண்டிய கடமைப்பாடுகளையும் வெளிப்படுத்துவதாக இருந்தன.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வெளிவந்த வெகுசாதனத் தொடர்புச் சாதனங்கள் இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களும், மரபுரிமை அடையாளங்களும் மறைந்து வருகின்றன.

அவை குறைந்த விலைக்கு விற்கப்பட்டு பிற இடங்களுக்கும், பிற நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன என்ற செய்திகளை வெளிப்படுத்தி வந்தன. அச்செயற்பாடுகள் 2009 ஆண்டின் பின்னர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இவற்றைத் தடுப்பதற்கும் மக்களிடையே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் சில முயற்சிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையாலும், பொது நிறுவனங்களாலும் எடுக்கப்பட்டாலும் அவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சிறிய முயற்சியாகவே இருந்து வருகின்றது. 

இந்நிலையில் ஜேயர்மனியைத் தலமையகமாகக் கொண்ட சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் செயற்பாடுகள் மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் பின்பற்றும் பாரம்பரியங்களையும், மாறிவரும் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களையும், கண்டறிந்து அவற்றைச் சமகால நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் ஊடாக ஆவணப்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. பேராசிரியர் கண்ணன், கலாநிதி சுபாஜினி ஆகிய இருவரின் தனிப்பட்ட முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இச்சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் செயற்பாடுகள் இன்று உலகத் தமிழர் மத்தியில் அவர்களுக்கு புதிய முகவரியைத் தேடிக்கொடுத்திருப்பதை அவர்களின் இலங்கை வருகையின் பின்னர் முகநூல்களில் வெளிவந்து கொண்டிருக்கும் பாராட்டுச் செய்திகள் உறுதி செய்கின்றன. அவற்றுள் இலங்கைக்கான தமிழர் மரபுரிமை மையத்தின் கிளையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கு அவர்கள் எடுத்த தீர்மானம் எமது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கிகாரமாகப் பார்க்கிறேன். இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிழக்கிலங்கை, தென்கிழக்கு, கண்டி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களும், மலையகம் உட்பட இலங்கையிலுள்ள பொது அமைப்புக்களும், மரபுரிமை ஆர்வலகர்களும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இலங்கைக்கான சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் கிளை நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.