இந்தியாவின், தமிழகத்தில் நேரக் கட்டுப்பாட்டினை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்த குற்றச்சாட்டின் கீழ் 1534 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம் முறை தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இந்திய உச்ச நீதிமன்றம் காசு மாசுபடுவதை கருத்திற் கொண்டு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மாத்திரம் அனுமதி வழங்கியது. 

இந் நிலையில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவத்ததுடன், இந்த உத்தரவை மீறி ஏனைய நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை மீறி நேரக் கட்டுப்பாட்டினை மீறி பட்டாசு வெடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று காலை வரை 1534 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் நெல்லை, மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 219 பேர் கைதுசெய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.