ஒரு நாட்டுக்கு எதிராக இன்னொரு நாடு பொருளாதாரத் தடைகளை விதிக்கின்றது என்றால் அது ஒரு வலுச்சண்டைதான். அதை அரச ஆக்கிரமிப்பு என்றும் கூறலாம். ஈரானுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை முதல் அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் தெஹ்ரானுடன் வாணிபத்தைச் செய்கின்ற எந்தவொரு நாட்டையும் எந்தவொரு கம்பனியையும் அல்லது எந்தவொரு தனிநபரையும் தழுவியதாக அமையக்கூடியவையாக அமைந்திருக்கின்றன. அந்த அளவுக்கு அந்த தடைகள் விசாலமானவையாக இருக்கின்றன. சீனா, இந்தியா, ஈராக், துருக்கி மற்றும் வடகொரியா போன்ற டொனால்ட் ட்ரம்பின் ஒரு சில " அதிர்ஷ்டக்கார நட்புநாடுகள் " தப்பித்துக்கொள்ளக்கூடும். தடைகளை எதிர்க்கின்ற கம்பனிகளுக்கு உதவுவதாக ஐரோப்பிய ஒன்றியமும் உறுதியளித்திருக்கின்றது. ஆனால், அதனால் பெருமளவுக்கு பயன்  கிடைக்கும் என்று நம்புவதற்கில்லை. அனேகமாக சகல சர்வதேச கோர்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்காவுடன் ஏதோ ஒரு வகையில் கொடுக்கல் வாங்கல்களை செய்கின்றன. தனது எதிரியின் நண்பன் தனக்கு எதிரியே என்ற ட்ரம்பின் அதிகார அறிவிப்பு  நண்பர்கள் மீது செய்யப்பட்ட ஒரு போர்ப் பிரகடனமே.

      

ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு நல்ல காரணம் ஒன்றை நினைத்துப்பார்ப்பது கஷ்டமானதாகும். பொருளாதாரத் தடைகள் தனவந்த நாடுகளினால் வறிய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்ற கடைசிமுடிவான மென் அதிகாரமாகும். வறுமைப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து தங்களது அரசாங்கத்தை சரணாகதியடையுமாறு கோருவதற்கு தூண்டுதல் கொடுப்பதும் பொருளாதாரத் தடைவிதிப்புகளின் பின்னாலுள்ள ஒரு  தந்திரோபாயம். ஆனால் அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்வதில்லை. ஏனென்றால் தடைவிதிப்புக்குள்ளாகின்ற நாடுகளின் அரசுகள் பொதுவில் கொடுங்கோன்மையானவையாகவே இருக்கின்றன. தடைகள் பெரும்பாலும் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களை வலுப்படுத்தி போர்த்தயார் நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. வடகொரியா, கியூபா மற்றும் ஈரான் இதற்கு உதாரணங்கள். கிறிமியாவை இணைத்துக்கொண்டமைக்காக ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் பயனற்றவையாகவே போயின.

தடைவிதிப்புகள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஈரானைக் கூறலாம். தடைகளினால் நெருக்குதலுக்குள்ளான தெஹ்ரான் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் 2015 அணு உடன்படிக்கையைச் செய்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஜனநாயக அடிப்படையில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு அம்சங்களை ஈரான் தொடர்ந்துவைத்துக் கொண்டிருந்ததால் தான் அது பெருமளவுக்குச் சாத்தியமானது. ஈரான் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறிக்கொண்டு ட்ரம்ப் நிருவாகம் அணு உடன்படிக்கையில் இருந்து வெளியேறிய பிறகு அந்த பொறுப்புக்கூறல் அம்சம் நிச்சயம் இல்லாமல் போயிருக்கும். உடன்படிக்கையின் கீழான தனது கடப்பாடுகளை மதித்துச்செயற்பட ஈரான் தவறியது என்பதற்கு எந்தவிதமான சான்றுமேயில்லை. மத்திய கிழக்கு பூராவும் இருக்கின்ற "கெட்ட பையன்களுக்கு " ஈரான் ஆதரவு வழங்குவதாக ட்ரம்ப் ஆத்திரப்படுகிறார். ஆனால், அது பற்றி அணு உடன்படிக்கையில் எதுவும் இல்லை. அத்துடன் அந்தப் பிரச்சினையைக்கையாளுவது மேற்குலகின் அலுவலாக இருக்கவும் கூடாது.

       

அணு உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட அமெரிக்காவின் செயல் சர்வசே ஒழுங்குமுறைக்கு எதிரான ஒரு குற்றம் மாத்திரமல்ல சட்டத்துக்கு முரணானதுமாகும். தடைகளை தனது நேசநாடுகளுக்கும் விரிவுபடுத்தியதன் மூலமாக ட்ரம்ப் அவற்றுடனான நம்பிக்கையையும் முறித்துவிட்டார். அதைவிடவும் பாரதூரமான விடயம், தடைகள்  கணிசமான அளவுக்கு தாராள வர்த்தகப்போக்கைக் கொண்ட அதிகார மையங்களைப் பலவீனப்படுத்தி, தெஹரானின் ஜனநாயக விரோத இராணுவ மற்றும் மதவாத அதிகார மையங்களைப் வலுப்படுத்தும் ஆபத்தைத் தோற்றுவிக்கும். இது ரஷ்யாவை நோக்கி ஈரான் மேலும் சாய்வதற்கு வழிவகுக்கும். அத்துடன் பிராந்தியத்தின் இஸ்லாமிய மோதல்களுக்குள் சம்பந்தப்படுவதற்கும் தெஹ்ரானைத் தூண்டும். பிற்போக்குவாதிகளுக்கு ட்ரம்ப்  ஒரு கனவுலக அமெரிக்கர், போர்விருப்புக்கொண்ட பேர்வழு.

பொருளாதாரப் போர் வறிய மற்றும்  நடுத்தரவர்க்கங்களை பலவீனப்படுத்தி எதச்சாதிகாரத்தைப் பலப்படுத்துகிறது. ஏனென்றால், அந்தப் போர் " வன்முறையற்றதும்" ஆக்கிரமிப்பாளருக்கு பெருமளவுக்கு செலவில்லாததுமாகும்.நெருக்கடியையும் ஏற்படுத்தாது. பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டுமென்ற நெருக்குதலும் வராது. முரண்நிலை தொடர்ந்து நீடிக்கும். தனவந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையிலான வெளி அகலமாகிக்கொண்டேபோகும். வெளியுறவுக்கொள்கை " ஆயுதக்களஞ்சியத்தில்" தடைகள் எப்போதுமே மழுங்கலான ஆயுதமே.

      

இவ்வாரம் நடைபெறும் அமெரிக்க காங்கிரஸுக்கான இடைக்காலத் தேர்தல்களுக்குப்  பிறகு அயத்தொல்லாக்களுடன் சிலவகை உடன்பாடுகளை எட்டுவதற்கு ட்ரம்ப் நாட்டம் காட்டக்கூடும் என்ற எதிர்பார்ப்பே இப்போதுள்ள ஒரே நம்பிக்கையாகும். அவ்வாறு காணப்படக்கூடிய உடன்பாடுகளை கொரிய பாணியிலான வெற்றி என்று அவர் நாமஞ்சூட்டவும் கூடும். அவ்வாறு அவர் நினைப்பாரேயானால் அதையே செய்யட்டும். தற்போதைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது நண்பர்களுக்கு குந்தகத்தைச் செய்கிறார். அதேவேளை தனது எதிரிகளுக்கு உதவுகிறார்.அவர் மத்திய கிழக்கைச் சீர்குலைக்கின்றார். உலக சுதந்திர வர்த்தகத்துக்கு எதிரான தனது செயற்பாடுகளையும் பிரசாரங்களையும் தீவிரப்படுத்துகிறார். அதில் நன்மை எதுவும் இல்லை.

( சைமன் ஜென்கின்ஸ், லண்டன் கார்டியன், 5 நவம்பர் 2018 )