புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனம் தொடர்பில் இதுவரையில் தன்னால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அக்டோபர் 26 ஆம் திகதியும் அதற்குப் பிறகும் ஜனாதிபதி செய்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும் பிரகடனம் செய்திருக்கும் நிலையில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியில் நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையே மோதல் மூளக்கூடிய பதற்றமான சூழ்நிலை தோன்றியிருக்கிறது.       " நான் எடுத்திருக்கும் தீர்மானங்களில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.நெருக்குதல்களுக்கு அடிபணியவும் போவதில்லை" என்று திங்களன்று கொழும்புக்கு வெளியே பத்தரமுல்லையில் நடைபெற்ற ' ரட்டம ரக்கின ஜன மஹிமய' பேரணியில் உரையாற்றியபோது ஜனாதிபதி சிறிசேன கூறினார்.         புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்துக்கு 113 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் தோற்கடிப்பதற்கு அந்த ஆதரவு போதுமானது என்றும் ஜனாதிபதி கூறினார்.ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக எதிரணியான ஐக்கிய தேசிய முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்திருக்கிறது.        பேரணியில் ஜனாதிபதி சிறிசேன மேலும் பேசுகையில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு கரு ஜெயசூரியவையும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பரேமதாசவையும் கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர் என்றும் சொன்னார்.      " எட்டு மாதங்களுக்கு முனனர் கரு ஜெயசூரியவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கேடட்டபோது அவர் தனது தலைவரைக் கைவிடமுடியாது என்று கூறி மறுத்துவிட்டார்.பிறகு இரு மாதங்கள் முன்னதாக நான் பிரேமதாசவை அழைத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் என்னால் பணியாற்றமுடியவில்லை என்பதைக் கூறி பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டபோது அவரும் தலைவருக்கு எதிராக செயற்பட முடியாது என்று கூறினார்.அதற்குப் பிறகே நாட்டுக்காக என்னுடன் சேர்ந்து பணியாற்றுவதற்குப் பொருத்தமான தலைவரை, அதுவும் தேசியவாதத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கின்ற ஒருவரை பிரதமராக நியமிக்க முடிவெடுத்து மகிந்த ராஜபக்சவை நாடினேன்.வெளிநாடுகளின் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக எம்மால் செயற்படமுடியாது" என்று ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டார்.         மறுபுறத்திலே, திங்களன்று அறிக்கையொன்றை வெளியிட்ட சபாநாயகர் ஜெயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜக்கிய தேசிய முன்னணியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது சபையில் காணப்பட்ட நிலைமையையே ஏற்றுக்கொண்டு செயற்படுமாறு தன்னைக் கேட்டிருப்பதால் பதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை பழைய நிலைமையின் பிரகாரமே தான் செயற்படவேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார்.          பாராளுமன்றம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நவம்பர் 14 கூட்டப்படவேண்டியிருக்கிறது.ஆனால், நவம்பர் 7 பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக ஜனாதிபதி தன்னிடம் சொன்னதாக சபாநாயகர் கூறினார்.பாராளுமன்றத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் அரசியலமைப்புக்கும் பாராளுமன்ற பாரம்பரியங்களுக்கும முரணானவை என்று எம்.பி.க்கள்  தனக்குச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் பாராளுமன்றத்தில் முன்னர் இருந்த நிலைமையையே ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் சபாநாயகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு  சலுகைகளும் வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டு பக்கம் மாறுவதற்கு தூண்டப்படுவதாக தனக்கு தகவல்கள் கிடைத்திருப்பதால் இனிமேலும் மௌனமாக இருக்க தன்னால் முடியாது என்றும் ஜெயசூரிய கூறியிருக்கிறார்.        இதனிடையே, பதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச பொருளாதார அபிவிருத்திக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஜனாதிபதி சிறிசேனவுடன் சேர்ந்து நெருக்கமாகப் பணியாற்றப்போவதாக பத்தரமுல்லை பேரணியில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.       அதேவேளை ஜனாதிபதி சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  சபாநாயகர் ஜெயசூரியவினால் வெளியிடப்பட்ட அறிக்கை வாபஸ் பெறப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது." த்தகைய பக்கச்சார்பான அறிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்பதுடன் சட்டவிரோதமானதுமாகும்.குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பிலான  தீர்மானங்கள் அரசியலமைப்பின் பிரகாரமே எடுக்கப்படவேண்டும்.யார் பிரதமராக இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை சபாநாயகருக்கு இல்லை. பிரதமர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவேண்டியவரே" என்று வெளியுறவு அமைச்சர் சரத் அமுனுகம கூறியிருக்கிறார்.     பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பின் பிரகாரமே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பாராளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்துவது என்பது கூட ஜனாதிபதியினால் மாத்திரமே செய்யப்படமுடியும் சன்றும் அமைச்சர் அமுனுகம குறிப்பிட்டிருக்கிறார்.        சபாநாயகர் ஜெயசூரிய தற்போது எடுத்திருப்பதைப் போன்ற ஒரு நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் எந்தவொரு ஏற்பாடுமே கிடையாது என்று கூறியிருக்கும் முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அறிக்கையை வாபஸ் பெறுமாறு கேட்டிருக்கிறார்.நாட்டில் உறுதிப்பாடின்மையை ஏற்படுத்த சபாநாயகர் முயற்சிப்பதாகவும் சுமதிபால குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
( நியூஸ் இன் ஏசியா)