உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச்  8,045 புள்ளிகளைப்பெற்று ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச்  8,045 புள்ளிகளைப்பெற்று ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.  

முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7,480 புள்ளிகளைப் பெற்று 2 ஆவது இடத்துக்கு பின்நகர்ந்துள்ளார்.

சுவிற்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6,020 புள்ளிகளைப்பெற்று 3 ஆவது இடத்திலும் ஆர்ஜென்டீன வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 5,300 புள்ளிகளைப் பெற்று 4 ஆவது  இடத்திலும்  ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே 5,085 புள்ளிகளைப் பெற்று 5 ஆவது இடத்திலும்  தென்னாபிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 4,310 புள்ளிகளைப் பெற்று 6 ஆவது இடத்திலும்  குரோஷியா மரின் சிலிச் 4,050 புள்ளிகளைப் பெற்று 7 ஆவது இடத்திலும் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 3,895 புள்ளிகளைப் பெற்று 8 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை, ஜப்பான் வீரர் நிஷிகோரி 3,390 புள்ளிகளைப் பெற்று 2 இடங்கள் முன்னேறி 9 ஆவது இடத்திலும் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 3,155 புள்ளிகளைப் பெற்று ஒரு இடம் பின்நகர்து 10 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷிய வீரர் காரென் கச்சனோவ் 7 இடங்கள் முன்னோக்கி 11 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.