முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹக்கும்புக்கடவள பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து 17 கிலோ மான் இறைச்சியை மீட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தல் பொலிஸார் மஹக்கும்புக்கடவள பிரதேசத்தில் நீதிமன்றத்திற்குத் தேவையாக இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு மான் இறைச்சியுடனானா இந்த மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளனர்.

முந்தல் பொலிஸார் மூன்று தினங்களாக மஹக்கும்புக்கடவள பிரதேசத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் பொலிஸாரைக் கண்டு தாம் வந்த மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்று சென்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார் அந்த மோட்டார் சைக்கிள்களைச் சோதனையிட்ட போது அதிலிருந்த மான் இறைச்சி மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் எட்டு கிலோ மற்றும் ஒன்பது கிலோ மான் இறைச்சி இருந்து மீட்கப்பட்டதாகவும், இந்த மான் இறைச்சி உணவகங்களுக்கும், வாங்குபவர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த இரண்டு மோட்டார் சைக்கிளிலும் வந்தவர்கள் தலைமறைவாகியிருப்பதாகவும், அவர்களைத் தேடிக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை பொலிஸார் மேற்கொண்டிருந்த இந்த நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவருடன் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இருவரையும் முந்தல் மற்றும் மதுரங்குளி பிரதேசங்களில் வைத்து கைது செய்திருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.