சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த போது  15 தடவைகள் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை அதே குற்றத்திற்காக 16 வது தடவையாக நேற்று 50 கசிப்பு போத்தல்களுடன் கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

யோகியான கல்வக எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். 

கசிப்பு விற்பனை மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கல்வக பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை முற்றுகையிட்டு பொலிஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது அவ்வீட்டிலிருந்த 50 கசிப்பு போத்தல்கள் அடங்கிய ப்ளாஸ்டிக் கேன் ஒன்றை கைப்பற்றியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெளியிலிருந்து கசிப்பு போத்தல்களை மொத்தமாகக் கொண்டு வந்து வீட்டில் வைத்து சில்லறையாக அவற்றை விற்று வருபவர் என்ற விடயம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸார் அங்கு செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே குறித்த கசிப்பு போத்தல்கள் அங்கு கொண்டு வரப்பட்டிருந்ததால் அவற்றை சந்தேக நபரால் மறைத்துக் கொள்ள முடியாது போனதாகவும், கொண்டு வரப்படும் கசிப்புடன் ஒன்றுக்கொன்று தண்ணீரைக் கலந்து அவற்றை விற்பனை செய்திருப்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இதற்கு முன்னர் கசிப்பு விற்பனை தொடர்பில் 15 தடவைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.