(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டு வருகின்றன என்பது மேற்குலக நாடுகள் உட்பட அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் தற்போது அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதாகவும் கூறி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் சிவில் அமைப்புக்கள், மக்கள் விடுதலை முன்னணி, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனாதிபதியை விமர்சிக்கும் சர்வதேச நாடுகள் ஏன் மாகாண சபை தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். 

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

சபாநாயகர் கருஜயசூரிய இவ்வாறு பக்க சார்பாக தொடர்ந்தும் செயற்படுவாராக இருந்தால் இறுதியில் விவசாயத்திற்கு செல்ல வேண்டிய நிலைமையே ஏற்படும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்குமாறு அவர் தெரிவித்து வருகின்றார். பிரதமர் மஹிந்தராஜபக்ஷ தன்னுடைய பெரும்பான்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரம் காண்பித்தால் போதுமானது. சபாநாயகருக்கு காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 113 பெரும்பாண்மை உறுதிப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வு கூடும் முன்னர் அது 125 ஆக அதிகரிக்கும்.