(நா.தினுஷா) 

தேசிய அரசாங்கத்தில் விடுதலை புலியாக தென்பட்ட வியாழேந்திரன், மஹிந்த அரசாங்கத்தில் தேசியவாதியாக மாறிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மஹிந்த அணியினர் ஆட்சி பலத்துக்காக பிரபாகரனையும் விலைபேசுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதியை பகடைக்காயாக பயன்படுத்தி மஹிந்த அரசியல் நாடகம் நடத்தி வருகின்றார்.

சர்வாதிகார ஆட்சியினை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காகவும் குடும்ப ஆட்சியில் இருந்த நாட்டை காப்பாற்றுவதற்காகவும் 62 இலட்சம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆனால் மீண்டும்  அவர்கள் விரும்பாத ஆட்சியினை ஜனாதிபதி உருவாக்க நினைப்பாராயின் மக்களின் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.